நடப்பு 2024ஆம் ஆண்டின் மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது.
டி20 உலக கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
இதன்படி, நடப்பு (2024) வருடம் 9வது சீசன், வருகிற அக்டோபர் 3ஆம் தேதி முதல் பங்களாதேஷில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன.
10 அணிகளும் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு, முதலில் லீக் சுற்றுக்களின் வடிவில் போட்டியிட உள்ளது.
லீக் சுற்றுகளின் முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
பின்னர் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் அக்டோபர் 20 ஆம் தேதி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் போட்டியிடும்.
இந்த தொடரில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுடன் குரூப் A யில் இடம்பெற்றுள்ளது.
இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது போல, இந்திய மகளிர் அணியும் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.