டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை:
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த காரணத்தால், தற்போது பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சாலையோர கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாளை மறுநாள் (செ.9) நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது.
அப்படி ஒருவேளை, இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்பவர்கள் மட்டுமல்லாமல் குறைந்த மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை பெறும் சிறிய வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள், ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 0.5% முதல் 2% வரை வணிகர்களிடம் கட்டணம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.